தமிழ் வயல்

Friday, February 22, 2008

காலம் இது கலி காலம்.

காலம்
இது கலி காலம்.
காந்திகளுக்கு
கோட்சேக்கள
அகிம்சை
போதிக்கிறார்கள்

ஆந்தைகள்
குயில்களுக்கு
இசை பாட
கற்றுத் தருகின்றன.

எருக்கம் பூக்கள்
மல்லிகைக்கு
மணம் பற்றி
உபதேசிக்கின்றன

வேப்பங்காய்கள்
அணி வகுத்து
பலாச் சுளைகளுக்கும்
மாம்பழக் கீற்றுகளுக்கும்
இனிப்பது
எப்படியென்று
இலக்கணம்
இயம்புகின்றன.

இதே ரீதியில்
காலம் போனால்.....
பொய்களிடம்
உண்மைகள்
கை கட்டி நிற்கும்

மின்மினிகளிடம்
விண் மீன்கள்
வெளிச்சத்துக்காய்
தவங் கிடக்கும்.

ஹிட்லர்களும்
இடி அமீன்களும்
தலைமை தாங்கும்
மனித நேயக்
கருத்தரங்குகளில்
ஏசு பிரான்களும்
புத்தர்களும்
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
வாசிப்பர்

சாக்கடைகளிடம்
சேர்ந்து
கங்கையும்
காவிரியும்
சுத்தம் பற்றி
விவாதிக்கக் கூடும்.

கொக்குகள்
மீன்களுக்கு
நீச்சல்
கற்றுத் தர
முன் வரலாம்.

ஏக பத்தினி விரதம்
பற்றி
ராமர்களுக்கு
அர்ச்சுனர்கள்
அறிவுரை
வழங்கக் கூடும்.

ஆதலால்
தோழர்களே,
எதற்கும்
ஆயத்தமாயிருங்கள்.....
காலம்...
இது கலி காலம்!

Saturday, May 19, 2007

சற்றே இழு

பூமிக் கோளமே!
நீ
உன் ஈர்ப்பு விசையால்
மேலேயுள்ள
பொருள்களையெல்லாம்
கீழே
இழுக்கும்
வலிமை பெற்றுள்ளாய்...
அந்த
அற்புத விசையை
சற்றே
பிரயோகித்து
மேலே..மேலே
அசுர வேகத்தில்
ஏறிக் கொண்டே
செல்கிற
விலைவாசி அசுரனை
கொஞ்சம்
கீழே
இழுத்துப்
போடேன்,
பார்க்கலாம்!

Friday, May 18, 2007

மழை

சட்ட விரோதமாக
கூடிய
மேகக் கூட்டங்களை
கலைக்க
இயற்கை
மின்னல்
சாட்டைகளை
வீசிய பொழுது
அவற்றின்
கண்களிலிருந்து
பொழிந்த
நீர்

கொடியது

கொடியது

கொடியது எது?
கற்றல்.
அதனினும் கொடியது?
ஆண்டுக் கணக்கில்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
நிற்றல்.

Friday, January 27, 2006

முன்னொரு காலத்தில்

(1)

தோட்டத்து வேலியருகே
நின்றபடி
தாத்தா
அப்பாவிடம் சொன்னார்,
"பார் அங்கே,
மரத்துக்கு மரம்
வேக வேகமாக தாவுதே
அது தானய்யா
செம் போத்து...
அடர்ந்த செவப்பும்
கொஞ்சம் கறுப்புமாய்
எவ்வளவு அழகு பாத்தியா?"
(2)
மிருகக் காட்சி சாலையில்
அப்பா
என்னிடம் சொன்னது,
"கூண்டுக்குள்ளே
சிவப்பாகவும்
சோகமாகவும்
உட்கார்ந்திருக்கே,
அது தானப்பா
செம் போத்து."
(3)
பொருட்காட்சி சாலையில்
ஒரு மாலைப் பொழுதில்
நான்
மகனிடம் சொன்னேன்,
"நன்றாகப்
பார்த்துக்கொள்,மகனே,
அதோ,அந்தக்
கண்ணாடிக் குடுவையில்
பாதுகாக்கப்பட்டிருக்கிறதே...
அது தான் தம்பி,
அந்தக் காலத்து
செ...ம்...போ...த்...து."

Thursday, January 26, 2006

முன்னறிவிப்பு

சுங்கத்திலிருந்து
கிழக்காய் நீளும்
சாலையின் முடிவில்
பிருமாண்டமான
பிள்ளையார் சிலை.
சாலையின் ஒரு புறத்தில்
திருமணக் கூடமாய்
மாறியிருந்தது
பேர் பெற்ற
படப் பிடிப்பு நிலையம்.
எதிர் புறத்திலோ
பெரிய பள்ளிக்கூடம்.
சாலை முழுதும்
நாள் முச்சூடும்
வாகனங்களின்
ஓயாத போக்கு வரத்து
இரைச்சலோடு.
காலை,மாலை
இரு வேளையும்
அச்சமற்று சாலை கடக்கும்
பள்ளிக் குழந்தைகள்....
சாலையின்
தொடக்கத்தில்
அமைந்திருந்த
கல்லறைத்தோட்டத்தின்
முன் வாசலில்
"இங்கு...
சவப்பெட்டிகள்
தயார்!"
என்றொரு
அறிவிப்புப் பலகை.....
பயணிப்போரின்
மனங்களை
அச்சுறுத்தியபடி.

Wednesday, January 25, 2006

அன்றொரு மழைநாளில்....

முந்தின நாள் ராத்திரி
இடி மின்னலுடன்
கனத்த மழை.
அதிகாலையும் நீடித்த
சின்னத் தூறலில்
சணல் சாக்கு
தலைக்குக் குடையாக
காடு காடாய் ஓடி
வரப்புகளில் புடைத்திருந்த
காளான்களை
லகுவாகப் பிடுங்கி
மடியில் சேர்த்து
வீட்டுக்கு வந்தால்
அமர்க்களமான வரவேற்பு.
கறிக் குழம்பு
தோற்கும்படிக்கு
அம்மாவின்
காளான் குழம்பு
ஓ...இன்று
அந்தக் காளான்களையும்
காணோம்....
கன ஜோராய்
குழம்பு வைக்க
அம்மாவும் இல்லை!

Saturday, January 21, 2006

ஒன்று மற்றொன்றாக

விதையின்
விரிவு
மரம்.
மரத்தின்
சுருக்கம்
விதை.